எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது ஒக்ரோபர் 13, 2008
Posted by தமிழ் in நேர்காணல்.add a comment
கவிஞர் தமிழச்சி. தமிழிலக்கியத் துக்கு தெரிந்தமுகம். தி.மு.க.வு.க்கு புதிய முகம். நெல்லை மாநாட்டில் தி.மு.க. கொடியேற்றியதன் மூலம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
‘எஞ்சோட்டுப் பெண்’, ‘வனப்பேச்சி’ கவிதைத் தொகுதிகள் மூலம் கவிஞராக அறிமுகமான தமிழச்சியை சந்தித்தோம்.
இதுவரை இலக்கிய மேடைகளிலும், கல்லூரி வகுப்பறையிலும் பேசிக்கொண்டிருந்துவிட்டு திடீரென்று ஒரு அரசியல் மேடையில் தோன்றியது பற்றிச் சொல்லுங்கள்?
‘‘என்னுடைய தந்தை தங்கபாண்டியன் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலம் தி.மு.க.வில் இருந்தவர். முதல்முறையா அறிஞர் அண்ணாவால் எம்.எல்.சி.யாக நியமனம் செய்யப்பட்டவர். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். நாங்க பிறந்ததே தி.மு.க. குடும்பம். என்னோட பள்ளிக் காலத்திலேயே கலைஞரின் நெஞ்சுக்கு நீதியைப் படிச்சுட்டேன். அதனால நான் இப்ப திடீரென்று அரசியலுக்கு வந்துட்டதா சொல்லக்கூடாது.’’
கல்லூரிப் பேராசிரியராக இருந்துகொண்டு மேடை நாடகங்களில் பங்கேற்று நடிக்கிறீர்கள், நடிப்பு ஆர்வம் எப்படி வந்தது?
‘‘கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும் நான் பரதநாட்டிய நடனக் கலைஞராகத்தான் இருந்தேன்.
பள்ளியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். எப்படி நடிக்கவேண்டும் என்பதையும் பாடிலாங்வேஜ், குரல் இதெல்லாம் எப்படி அமையவேண்டும் என்பதையெல்லாம் என் தந்தைதான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். முதலில் நடனம், பிறகு நாடகம். எப்போதும் என்னோடு இருப்பது கவிதைதான்.’’
ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு தமிழ்க் கவிதை பக்கம் ஈடுபாடு வந்தது எப்படி? கவிதை எழுத உங்களை உந்துதல் படுத்தியது எது?
‘‘நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் பக்கத்தில் இருக்கிற மல்லாங்கிணறு என்கிற ஊர். இது வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் விவசாயம் என்று வாழ்ந்து வந்த என் கிராமத்து மனிதர்களைப் பற்றி எழுதவேண்டும் என்கிற உந்துதல் வந்துதான் ‘மாரி பொய்த்தது’ என்ற முதல் கவிதையை எழுதினேன். ஆங்கில இலக்கியம் படித்தாலும் நான் பிறந்தது கிராமத்தில்தானே. ரெண்டாவது, தி.மு.க.வையும் தமிழையும் பிரிக்க முடியாது. கவிதையை என் மண் சார்ந்த விஷயங்களைப் பற்றி எழுத பயன்படுத்திக்கொண்டேன். ‘எஞ்சோட்டுப் பெண்’ என் முதல் கவிதைத் தொகுதி. அடுத்து ‘வனப்பேச்சி’. ‘வனப்பேச்சி’ கிராமத்து சிறுதெய்வங்கள்ல ஒன்று.’’